வன்னியர் உள்ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கடந்த ஏப்ரம் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.5% இட ஒதுக்கீடு என்பது எந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில், அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டதால் தான், நீதிமன்றம் தடை விதித்ததாக கூறினார்.
அதிமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதை பொருட்படுத்தாமல் திமுக ஆட்சியில் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.