இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இலங்கை அணியை டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி வந்த வனிந்து ஹசரங்கா அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, “இலங்கை அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த வனிந்து ஹசரங்கா, அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணியின் முக்கிய வீரராக தொடர்ந்து அவர் செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா - இலங்கைக்கு இடையே டி20 தொடரின் முதல் போட்டி வரும் ஜூலை 26-ம் தேதியும், 2-வது போட்டி ஜூலை 27-ம் தேதியும், 3-வது போட்டி ஜூலை 29-ம் தேதியும் நடைபெறவுள்ளது.