படுக்கை வசதியுடன் கூடிய #VandeBharat ரயில்கள்: 3 மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டம்!
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முழுக்க முழுக்க ஏசி வசதிகளுடன் கூடிய இந்த ரயில்களில், இருக்கை வசதி மட்டுமே உள்ளன. இந்த சூழலில், நெடுந்தொலைவுக்கு இந்த ரயில்களை இயக்கும் விதமாக, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பெங்களூரைச் சேர்ந்த பி.இ.எம்.எல். நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ரயிலை இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்க அனைத்து நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல். ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
மாதிரி வடிவமாக வைக்கப்பட்டுள்ள தூங்கும் வசதி கொண்ட (ஸ்லீப்பர்) பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஸ்லீப்பர் பெட்டியில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஐ.சி.எப். நிர்வாகம் தகவல் தெரிவித்தது. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.