சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்காக ரயில்வே பல்வேறு புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தான் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை பயணிகளுக்கு சொகுசு, விரைவான பயணம் என்பதை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பயணிகளின் வரவேற்பை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முழுவதும் ஏசி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் இருப்பதனால் பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு வசதியானவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாட்டில் மட்டுமே சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, ஜுலை 11,12,13, 14, 18,19,20,21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.