For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!

01:55 PM Dec 13, 2023 IST | Web Editor
வைகுண்ட ஏகாதசி பெருவிழா  டிச 23 ல் சொர்க்கவாசல் திறப்பு
Advertisement

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது,  டிசம்பர் 23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

Advertisement

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.  பகல் பத்து,  ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும்.

இன்று (டிச. 13) முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கியது.  இதையொட்டி,  கோயில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தை சேர்ந்தார்.  அங்கு அரையர் சேவை,  அலங்காரம்,  திருப்பாவாடை கோஷ்டி, உபயதாரர் மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், இரவு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல் பத்து நாட்களில் வரும்22-ம் தேதி வரை தினமும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நாட்களில் மூலவர் முத்தங்கி சேவையை காலை 7.15 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும், மாலை 6.45 முதல் இரவு 8.30 மணி வரையிலும் சேவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்குப் பிறகு ஆரியபடாள் வாயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் வரும் 22-ம் தேதியும், சொர்க்கவாசல் திறப்பு 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளன.தொடர்ந்து இராப் பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ஜன. 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Tags :
Advertisement