For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா - அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

07:59 AM May 22, 2024 IST | Web Editor
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா   அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

Advertisement

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா இன்று (மே 22) வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தையொட்டி வைகாசி மாதம் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. இதனையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்தும், அலகு, வேல் குத்தியும், காவடி சுமந்தும், அரோகரா கோசம் முழங்க பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

வைகாசி விசாகத்திற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கோயிலில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. எனவே, வரக்கூடிய பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து முருகனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” – அமித்ஷா கேள்வி!

பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்காக 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement