#VaigaiSFExpress | வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு வயது 47 - கேக் வெட்டி கொண்டாட்டம்!
47வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாக திகழும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. தெற்கு ரயில்வேயில் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேர பயணத்திற்காக 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ஜில், அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு உண்டு. 1984-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்ட பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு. அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகோ பைலட்டுகளுக்கு மாலை அணிவித்து கேக் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை ரயில் ஆர்வலர்கள் வெளிப்படுத்தினர். மதுரையில் இருந்து 6.40 மணி அளவில் புறப்பட்ட இந்த ரயில் சென்னை நோக்கி பயணம் செய்யக்கூடிய நிலையில், ரயிலில் பயணம் செய்யக்கூடிய ரயில் ஆர்வலர்கள், பயணிகளுக்கு ரயில் கோச்சிலேயே கேக் வெட்டி வழங்கப்பட்டது.