Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!

நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:59 AM Aug 12, 2025 IST | Web Editor
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கடந்த 2013, 2017, 2019 மற்றும் 2022ஆம் ஆண்டு வரை 4 முறை டி.ஆர்.பி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் 21.07.2024 அன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நியமனத் தேர்வும் நடத்தப்பட்டது. அதிலும் புதியதாக தமிழ் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 ஆயிரத்து 176 பேரில் 23 ஆயிரத்து 972 ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் 2024 ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த எஸ்.ஜி.டி எனப்படும் நியமனத் தேர்வு காலிப் பணியிடங்கள் வெறும் 2 ஆயிரத்து 768 மட்டுமே.

Advertisement

ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் 4 ஆசிரியர் தகுதித் தேர்வும், ஒரு தமிழ் தகுதித் தேர்வும், ஒரு நியமனத் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்ற 23 ஆயிரத்து 972 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த 2,768 காலிப் படங்கள் என்பது மிகவும் சொற்பமானது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த காலி பணியிடங்களானவை 2021ல் 730, 2022ல் 3,987, 2023ல் 6,553, 2024ல் 2,768 என மொத்தம் 14,038 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் இதுவரை இந்த காலிப் பணியிடங்களை தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

மேலும் கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்த 19,260 இல் தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் கடந்த 2021 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த சுமார் 15,000 காலி பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 2025 மே மாதம் வரை தொடக்கப்பள்ளிகளில் சுமார் 20,000 காலி பணியிடங்கள் உள்ளன. அதேசமயம் 23,972 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் உள்ளபோது தமிழ்நாடு முழுவதும் 450 வட்டாரங்களில் சுமார் 18,000 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர்.

இதுபோன்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்பது பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பள்ளி மேலாண்மை குழு போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுடன் வருபவர்கள் தான். இவர்கள் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போல தகுதித் தேர்வு, தமிழ் தேர்வு, நியமனத் தேர்வு போன்றவைகளில் பங்கேற்று திறம்பட மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.

மேலும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'தற்காலிக ஆசிரியர் நியமனம் மிகவும் ஆபத்தானது' என குறிப்பிட்டுள்ளது. மேலும் 20.7.2018 ஆம் ஆண்டு அரசாணை எண் 149ன் படி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பணி நிரவல் அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இசை மற்றும் தையல் ஆசிரியர்களை தவிர்த்து 1 முதல் 5 வகுப்பு வரை பணிநிரவல் முறையில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை முழுதாக நீக்க வேண்டும்.

2013 முதல் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் நியமனத் தேர்வு ஆசிரியர்கள் பெரும்பான்மையோர் 40, 50 வயதை கடந்த நிலையில் உள்ளனர். வாழ்வின் பெரும் பகுதியை படிப்புக்காகவும், தங்களின் கல்வித் தகுதியை உயர்த்துவதற்காகவும் உழைப்பு, பொருளாதாரம், பொன்னான காலம் போன்றவற்றை இழந்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களின் வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் கிடைக்க வேண்டிய வேலை அவர்களுக்கு கிடைக்காததால் அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் வாழ்வின் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல், அவர்களின் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி, நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்கப்பள்ளி என்பது ஒருவரின் வாழ்வின் தொடக்கப் புள்ளியாகும். அந்தப் புள்ளி சரியாக போடாவிட்டால் கோலமும் அலங்கோலமாகும். அதுபோலவே வாழ்க்கையும். தொடக்கக் கல்வி சரியாக அமைந்தால்தான் பிற்காலத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, உயர் படிப்புகள் என ஒவ்வொரு நிலையிலும் சிறப்பாக அமையும். ஏற்கனவே 60% தொடக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததாலும், தரமான கல்வி கிடைக்காதாலும் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தில் மழலைக் கல்வி முதல் தனியார் பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையிலும் வறுமை நிலையில் வாடும் ஏழை, எளிய குடும்பத்தினர் நம்பி இருக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றால் மிச்ச சொச்சம் இருக்கின்ற பள்ளிகளையும் மூட வேண்டிய நிலை வரும். அவ்வாறு மூடப்பட்டால் ஏழை, எளிய மக்களின் கல்வி". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
PMKprimary schoolsRamadossSchoolsstudentscareerStudiesvacancies
Advertisement
Next Article