#UttarPradesh | குழந்தையை தாக்க முயன்ற ஓநாய்... அடித்தே கொன்ற கிராம மக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தாக்க முயன்ற ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக ஓநாய்கள் அட்டகாசம் நீடித்து வந்தன. அந்த மாவட்டத்தில் இருந்த 50 கிராமங்களில் 6 ஓநாய்கள் சுற்றி வந்தன. ஓநாய்கள் தாக்கியதில் 7 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் ஓநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். இதில் அவர்கள் 5 ஓநாய்களை பிடித்த நிலையில் ஒரு ஓநாய் மட்டும் வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில், எஞ்சிய ஓநாய் நேற்று முன்தினம் இரவு (அக்.5) மஹசி வட்டத்தில் உள்ள தமாச்புா் கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்தது.
அங்கு தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓநாய் தூக்க முயன்றது. அப்போது, குழந்தையின் தாய் விழித்து அலறியதை அடுத்து, அங்கிருந்த ஆட்டுக் குட்டியை ஓநாய் துாக்கிச் சென்றது. அப்போது, ஓநாயை சுற்றி வளைத்த கிராம மக்கள், ஓநாயை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், அந்த ஓநாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.