உ.பி. ஆன்மிக நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்! சடலங்கள் குவிவதை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த காவலர்!
ஹத்ராஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், சடலங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அருகே ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் வரும் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல்போடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. தவிர, அதிக அளவில் அனல் காற்றும் வீசியுள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற்ற பந்தலில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற தொடங்கினர். அப்போது, திடீரென நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள்பலர் கீழே விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமனம்!
இந்நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காவலர் ரவி யாதவ் பணியமர்த்தப்பட்டிருந்தார். எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியிலிருந்த ரவி யாதவ், சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரவி யாதவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.