#UttarPradesh | முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி... கொத்தாக தூக்கிய அதிரடிப் படையினர்!
உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சரின் தனிச் செயலாளர் எனக்கூறி ஈடுபட்ட வந்த நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்திலுள்ள சஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரூக் அமன். 26 வயதான இவர் தன்னை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தனிச் செயலாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதாவது, இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வைப்பதாக கூறி மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.
அதனுடன், அந்தப் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தையும் நடத்தி வந்திருக்கிறார். இந்த மோசடி சம்பவம் குறித்து சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் நேற்று முன்தினம் (செப்.12) ஃபரூக் அமனை கைது செய்தனர். இவர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து 2 மொபைல் போன்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று, கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேச முதலமைச்சரின் தனிச் செயலாளர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த விவேக் சர்மா என்னும் பண்டு சௌதாரியை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.