#UttarPradesh | அரசு மருத்துவமனை தீ விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
உ.பி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் கடந்த நவ.15ம் தேதி இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதில் 2 குழந்தைகள் நேற்று (நவ.23) சிகிச்சை பலனின்றி பலியாகின. அக்குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைவாகவும் மற்றொரு குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவர் கூறியுள்ளார். இந்த தீ விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.