#UttarPradesh | தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரூடோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அதனை திடீரென விழுங்கியுள்ளார். அப்போது மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை தனது அம்மாவிடம் கூறியுள்ளான்.
அவர்களும் உடனடியாக தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் குடித்த உடன் மிட்டாய் மேலும் நழுவி உள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் சாக்லேட்டை அகற்ற முடியவில்லை. இறுதியில் சிறுவன் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளான். சுமார் 3 மணிநேரம் மூச்சுத் திணறலால் துடிதுடித்து சிறுவன் இறந்துள்ளான்.
சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த கடைக்காரர் கடையை மூடிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடைக்காரரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து, அந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.