உத்தரகாண்ட்: சுரங்கத்தில் சிக்கியவர்களை இன்றைக்குள் மீட்க திட்டம்!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் இன்றைக்குள் மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு, தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும் வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் – கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி!
இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியில், மின்சாரம், நீர் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. மேலும், உணவு, மருந்துகள் உள்ளிட்டவை பிரத்யேக, 4-இன்ச் கம்ப்ரசர் பைப்லைன் மூலம் அனுப்பப்படுகிறது.
தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு அரசு நிறுவனங்கள் அணி திரட்டப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், உத்தர பிரதேசம் (8), பிகார் (5), ஒடிஸா (5), மேற்கு வங்கம் (3), உத்தரகண்ட் (2), அஸ்ஸாம் (2), ஹிமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளனர்.