For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன...?

10:02 PM Nov 29, 2023 IST | Web Editor
உத்தரகாண்ட் சுரங்க விபத்து  மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன
Advertisement

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கப்பாதை திட்டம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். தேசிய, மாநில மீட்புப்படைகள், நெடுஞ்சாலைத்துறை, சுரங்கத்துறை, ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்று, 17 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.     

பிரதமர் பாராட்டு

மீண்டு வந்த தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்டது உணர்ச்சிகரமான ஒன்று. இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும் வலிமையும் ஊக்கம் தருகிறது. தொழிலாளர்களின் குடும்பத்தினர் காட்டிய பொறுமையும் தைரியமும் பாராட்டத்தக்கது என்றார் பிரதமர். மீட்பு பணிகள் முடிந்த பிறகு, ‘’பொறுமை, கடின உழைப்பு, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி.

நெகிழும் தொழிலாளர்கள்

வெளியில் வந்த தொழிலாளர்களும் தங்களது த்ரில் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அவர்களில், கிலேஷ் சிங் கூறுகையில், ’’எனது கண் முன்னரே சுரங்கம் இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த சத்தத்தால், எனது காது பாதிக்கப்பட்டது. சுரங்கம் இடிந்து விழுந்த 18 மணி நேரம் வரை வெளியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது போன்று விபத்து ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட பயிற்சியின்படி, தண்ணீர் குழாய்களை திறந்து விட்டு, இடிபாடுகளுக்கு அப்பால் நாங்கள் சிக்கியிருப்பதை வெளியில் இருப்பவர்களுக்கு உணர்த்தினோம். இதையடுத்துதான், இடிபாடுகளுக்கு இடையில் 3 அங்குல இரும்பு குழாயை செலுத்தி, ஆக்ஸிஜன், உணவு, மருந்துப் பொருட்களை வெளியில் இருந்து அனுப்பினர்’’ என்றார்.

விசாரணைக்குழு அமைப்பு

உத்தரகாண்ட்  சுரங்க விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. அவர்கள், சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, சுரங்கப் பணிகளைத் தொடங்கும் முன்னதாக அப்பகுதியில் மண்ணியல் ஆய்வு செய்யப்பட்டதா? சுரங்கம் தோண்டும் அளவிற்கு மண் உறுதியாக இருக்கிறதா…? மண் சரிவு சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதா…? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

சிக்கலான புவியியல் அமைப்பு

இமயமலை பகுதியானது பிற மலைத் தொடர்களோடு ஒப்பிடுகையில், இளமையானது மட்டுமின்றி உறுதியற்ற, சற்று நெகிழும் தன்மை கொண்டதாக உள்ளன. அதில், துளையிடுதல், பள்ளம் தோண்டுதல், சுரங்கம் அமைத்தல், கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் போது, எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது கூறப்படுகிறது. ஜோஷிமட் நிலச்சரிவுகளே இதற்கு சரியான உதாரணம் என்கிறார்கள் புவியியலாளர்கள்.

சுற்றுச் சூழல் அனுமதி தவிர்ப்பா?

இத்தகைய சூழலில், புனிதத் தலங்களுக்கான போக்குவரத்து வசதி, சுற்றுலா மேம்பாடு என்று சுரங்கப்பாதை அமைக்கும் பணி 4.5 கிமீ தூரத்திற்கு திட்ட மிடப்பட்டது சரியா? புவியியல் ரீதியாக சிக்கல்களைக் கொண்ட பகுதியில், சார் தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ஏன் மேற்கொள்ள வேண்டும்...? என்று கேட்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். குறிப்பாக, ’’இந்தியாவில் 100 கிலோ மீட்டருக்கு அதிகமான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். ஆனால், 889 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த திட்டத்தை’ 53 பகுதிகளாக பிரித்து, எந்தவொரு பகுதியும் 100 கி.மீ தூரத்துக்கு அதிகமில்லை என்று கூறி சுற்றுச் சூழல்துறையின் அனுமதியை தவிர்த்தது ஏன்?’’ என்றும் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எச்சரிக்கை மீறலா...?

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்றம், ‘சார்தாம் நெடுஞ்சாலை’ திட்டத்தை அகலப்படுத்த அனுமதி அளித்தது. ஆனால், இந்த திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவர் ரவி சோப்ரா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ’’இமயமலைப் பகுதியில் இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’’ என்று குறிப்பிட்டார். இது போன்ற எச்சரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லையா? உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா..? என்பன உள்ளிட்ட கேள்விகளும் எழுகின்றன.

சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

விபத்துக்கு பிறகு உத்தரகாண்ட் மாநில எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா கூறுகையில், ‘’இதை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், சுரங்கப் பணியில் மீட்புத் திட்டங்கள் எதையும் வைத்திருக்கவில்லை. விபத்து நடந்தால் வெளியேறுவதற்கான வழி ஏன் இல்லை..? இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அர்னால்ட் டிக்ஸ், இமாலயப் பகுதிகளில், வழக்கத்துக்கு மாறான சூழல் இருப்பதாக கருதுவதாகவும், இங்கு பாறையின் தன்மை மாறிக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

எப்போது விடை தெரியும்?

தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அஹ்மதிடம், இந்த விபத்து குறித்த கேள்விக்கு, விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வெளிவரும் போது, அனைத்து வினாக்களுக்கும் விடை தெரியும்” என்றார்.

சுரங்கப்பணிகளின் போதே ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், தேசிய, மாநில மீட்புப் படைகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர்களின் கூட்டு முயற்சியால் 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கி விபத்து ஏற்பட்டிருந்தால்...? என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை... நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து திட்டமிட்டபடி சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவேறுமா...? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது....

Tags :
Advertisement