For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரகாண்ட் சுரங்க விபத்து : தவிக்கும் 41 உயிர்கள் - வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்....!

10:00 PM Nov 21, 2023 IST | Web Editor
உத்தரகாண்ட் சுரங்க விபத்து   தவிக்கும் 41 உயிர்கள்   வீடியோவை பார்த்து காத்திருக்கும் உறவுகள்
Advertisement

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வரும் நிலையில் அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களை இணைக்கும் வகையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 900 கி.மீ தூரத்திற்கு சர்தாம் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனமீகரீதியில் மட்டுமின்றி, பாதுகாப்பு அடிப்படையிலும் இந்த சாலை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சாலை அமைப்பதன் மூலம், சீனா எல்லை அருகே பிரம்மோஸ் ஏவுகணையை நிறுத்தி வைக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

சர்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகாசி - யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக தொழிலாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

8 மாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு

கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்க பாதையின் நுழைவு பகுதியில் இருந்து 600 அடி தொலைவில் 120 அடி நீளத்திற்கு சுரங்கப் பாதை திடீரென இடிந்து, சரிந்தது. இதன் மறு பக்கத்தில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் அடைபட்டுள்ளனர். குறிப்பாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர், உத்தரப் பிரதேசத்தினர் 8 பேர், ஒடிசா 5, பிஹார் 4, மேற்கு வங்கத்தை 3, உத்தரகாண்ட் மாநிலத்தவர்கள் 2, அசாம் மாநிலத்தவர் இருவர், இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் என மொத்தம் 41 பேர் சிக்கியுள்ளனர்.

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர். வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கனரக துளையிடும் கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேகமாக துளையிடப்பட்டால், மண் சரிவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், மிக கவனமாகவும் துல்லியமாகவும் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் நேரில் ஆய்வு

மீட்புப் பணிகளை பார்வையிட்ட உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை கண்காணித்து ஆலோசனை அளித்து வருகின்றனர். "சுரங்கப்பாதை பணி ஏறக்குறைய நான்கரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்றும், கட்டுமானப் பணிகள் 4 கிலோ மீட்டருக்கு நிறைவடைந்தன என்றும் தெரிவித்துள்ளார். எதிர்பாராத விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து விசாரித்தார்.

இரவு பகலாக மீட்பு பணி

இரவு பகலாக சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விபத்துக்கு பிறகு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் மீட்பு பணிகளும் இப்போது இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. சுரங்கபாதை இடிந்த பகுதியின் மூன்று புறங்களில் இருந்து 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதன்படி, சுரங்கபாதையின் நுழைவு பகுதியில் இருந்து சிறிய குழாய் சொருகப்பட்டு, இதன் வழியாக பிராண வாயு, உலர் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், 6 இஞ்ச் பைப் ஒன்றும் வெற்றிகரமாக உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, சமைத்த உணவுகளும் உள்ளே அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதையடுத்து, 10 நாட்களுக்கு பிறகு கிச்சடி உள்ளிட்டவற்றை தொழிலாளர்கள் சாப்பிட்டுள்ளனர்.

வீடியோ தந்த நம்பிக்கை

இந்த குழாய் மூலம் எண்டோஸ்கோபி கேமராவையும் அனுப்பி தொழிலாளர்களிடம் மீட்புக் குழுவினர் பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதல் வீடியோ சில்க்யாரா சுரங்கத்தில் எண்டோஸ்கோபி பிளக்சி கேமரா மூலம் கிடைத்துள்ளது. அனைவரது உடல்நிலையும் விசாரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நலமுடனும் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர் என்கிற நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி, வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்கள் உடன் மீட்பு குழுவினர் பேசும் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, , கேமரா முன்பாக வந்து நின்று பேசுங்கள் என்று மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் சொல்வதைக் கேட்டு, தொழிலாளர்களும் கேமராவிற்கு முன்னே வந்து பேசுகின்றனர்.

நிபுணர்கள் குழு தீவிரம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ரோபோடிக்ஸ் குழுவினரும் மீட்புப் பணியில் களமிறங்கி உள்ளனர். சர்வதேச சுரங்கப் பணிகள் அமைப்பின் தலைவரும் சுரங்கப்பாதை மீட்புப் பணி நிபுணரான அர்னால்ட் டிக்சினின் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.  இடிந்த சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து துளையிட்டு, தொழிலாளர்களை மீட்கும் வகையில் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளனர். எந்த பகுதியில் எந்த பகுதியில் துளையிடலாம், அதற்கான சாத்திய கூறுகள் குறித்து டிக்சின் ஆய்வு செய்துள்ளார். தொடர்ந்து ஆலோசனைகளையும் அளித்துள்ளார்.

தாமதம் ஏன்..?

குறிப்பாக, சுரங்கப்பாதையை அடைத்துள்ள இடிபாடுகள் வழியாக துளையிடும் பணியின் போது மீண்டும் சரிவு ஏற்பட்டதால், இந்த பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மற்றுமொரு பகுதியில் துளையிடும் போது பெரும் பாறைகள் குறுக்கிட்டதால் அந்த பணிகளும் நிறுத்தப்பட்ன. சுரங்கப்பாதையின் மேற்பகுதியிலிருந்து 80 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் பயன்படுத்தும் கனரக துளையிடும் கருவிகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த கருவிகளை மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்காக தனி சாலையும் அமைக்கப்பட்டது. சர்வதேச சுரங்கப்பாதை வல்லுநரான அர்னால்ட் டிக்ஸின் ஆலோசனைப்படி, பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் மீட்புப் பணிகளுக்கு இன்னும் ஓரிரு நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மனவுறுதியுடன் இருக்கும் வகையில் வாக்கி டாக்கி மூலம் உறவினர்களுடன் அடிக்கடி பேச வைக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கப்பட்டும் வருகின்றன. அதே நம்பிக்கையோடு உறவினர்களும் காத்திருக்கின்றனர்.

எழும் கேள்விகள்...?

இதற்கிடையே, விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உத்தரகாண்ட் அரசு அமைத்துள்ளது. சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்கள் குறித்து, குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். சுரங்கப் பணிகளைத் தொடங்கும் முன்னதாக அப்பகுதியில் மண்ணியல் ஆய்வு செய்யப்பட்டதா? சுரங்கம் தோண்டும் அளவிற்கு மண் உறுதியாக இருக்கிறதா...? மண் சரிவு சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதா...? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது உள்ளிட்ட கேள்விகளையும் இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அனைவரையும் உயிரோடு மீட்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பின் முதல் இலக்காக இருகிறது.

எதிர்க்கட்சியின் வேண்டுகோள்

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா கூறுகையில், ‘’மீட்பு பணிகள் குறித்து குறை சொல்லவில்லை. பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். இதை அரசியலாக்க்கவும் விரும்பபில்லை. ஆனால், சுரங்கப் பணியில் மீட்புத் திட்டங்கள் எதையும் வைத்திருக்கவில்லை. விபத்து நடந்தால் வெளியேறுவதற்கான வழி ஏன் இல்லை..? இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த பணிகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணை நடத்த வேண்டும்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement