பொது சிவில் சட்டம் - இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் கடந்த பின், 2016 ஆம் ஆண்டு 21-வது சட்ட ஆணையம் நிறுவப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பொது சிவில் சட்டத்தின் சாதக பாதகங்களை 2 வருடங்கள் ஆய்வு செய்து 152 பக்க அறிக்கையை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் அவசியமில்லை, தற்போதைய சூழலுக்கு உகந்ததாகவும் இருக்காது என கூறப்பட்டது. அதோடு இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், பார்சியர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் தனிப்பட்ட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட 21-வது சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல், பொது சிவில் சட்டத்தால் மட்டும் இஸ்லாமிய பெண்களை காக்க முடியும் என மத்திய அரசு சொல்லி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணா்கள், பாா்சி இனத்தவர் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கென்று தனித்தனியே உள்ளன. அதற்குப் பதிலாக, அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றச் செய்வதே, பொது சிவில் சட்டத்தின் நோக்கமாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சட்டத்தை உத்தரகாண்டில் அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உத்தரகாண்ட் அரசு அமைத்தது. அந்தக் குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பிப்.2-ம் தேதி சமர்ப்பித்தது.
இதையும் படியுங்கள் : சம்பாய் சோரன் அரசு தப்புமா? - ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!
இறுதி வரைவை உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய மாநில அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில், இறுதி வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.