”அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக்கொள்கையின் பேரழிவு”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது உலக நாடு ஒன்றிற்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும். இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரியானது துரதிர்ஷ்டவசமானது என்றும் நியாயமற்றவை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்திருப்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் பேரழிவு என விமர்சித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”இந்தியாவின் தேசிய நலன் மிக உயர்ந்தது. சுயாட்சி கொள்கைக்காக இந்தியாவை தண்டிக்கும் எந்த நாடும், இந்தியாவின் எஃகு சட்டகத்தைப் புரிந்து கொள்ளாது. 7வது கடற்படை அச்சுறுத்தல்கள் முதல் அணுசக்தி சோதனைகளின் தடைகள் வரை, அமெரிக்காவுடனான உறவை காங்கிரஸ், சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வழி நடத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியை டேக் செய்த அவர், ”இந்தியா-பாகிஸ்தான் மோதலை டிரம்ப் நிறுத்தியதாக கூறியபோது நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். அவர் குறைந்தது 30 முறையாவது கூறிவிட்டார். நவம்பர் 30, 2024 அன்று, பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த பிரதமர் மோடி வெளிப்படையாக சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால், அதே நேரத்தில் டிரம்ப் 'பிரிக்ஸ் இறந்துவிட்டார்' என்று அறிவித்தார். டிரம்ப் பல மாதங்களாக "சமச்சீர் வரிகளை" திட்டமிட்டு வருகிறார். அது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்பட்ட அடியை குறைக்க மத்திய பட்ஜெட்டில் நீங்கள் எதுவும் செய்யவில்லை. வாஷிங்டனில் முகாமிட்டுள்ள இந்திய அமைச்சர்கள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகின்றனர். 6 மாதங்களுக்கும் மேலாக இருந்த போதும் நீங்கள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு இப்போது திரு. டிரம்ப் எங்களை மிரட்டி வற்புறுத்துகிறார் - ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி சுமார் ₹7.51 லட்சம் கோடி (2024). தற்போது அமெரிக்கா விதித்துள்ள 50% முழுமையான வரி என்பது ₹3.75 லட்சம் கோடி பொருளாதார சுமையைக் குறிக்கிறது. இதனால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலகள், விவசாயம், பால், பொறியியல் பொருட்கள், மின்னணு பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருந்து சூத்திரங்கள் மற்றும் உயிரியல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள் போன்ற நமது துறைகள் மிகவும் பாதிக்கப்படும். உங்கள் அரசாங்கத்திற்கு அதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மேலும் ,இந்த வெளியுறவுக் கொள்கை பேரழிவிற்கு நீங்கள் 70 ஆண்டுகால காங்கிரஸின் மீது பழி சுமத்த முடியாது” என்று தெரிவித்துள்ளர்.