பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து...!
பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மறுபுறம் இந்தியா கூட்டணி 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட சூழலில் 85 இடங்களில் வென்றது.
இதனை தொடர்ந்து இன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பீகாரின் 10 வது முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில், ”பீகார் முதலமைச்சராக பதவியேற்ற மதிப்பிற்குரிய நிதிஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய அரசாங்கமானது, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், அதன் வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றும், பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.