அமெரிக்கா | துப்பாக்கிச் சூட்டில் முடிந்த ஹவுஸ் பார்ட்டி... இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு பார்ட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) சிறுவன் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.