உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான சம்பவம்! - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! ராகுல் காந்தி இரங்கல்!
உ.பி ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக சொற்பொழிவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்திய கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் மீட்புப்பணிக்கு தேவையான தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.