திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உ.பி அரசு - 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடல் !
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆ தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது. இதுவரை திரிமேணி சங்கமத்தில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், துறவிகள், பொதுமக்கள் என 55 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
அந்த வரிசையில் சிறைக் கைதிகள் புனித நீராட உத்திரப் பிரதேச அரசு சிறப்பு ஏற்பாடு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று(பிப்.21) அம்மாநிலம் முழுவதும் 75 சிறைகளில் கைதிகள் குளிக்கும் குளியல் தொட்டிகளில் திரிவேணி சங்கம புனித நீரை கலந்து கைதிகள் புனித நீராடினர்.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி மற்றும் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்துக்கு நன்றி. அவர்களின் தலைமையில் பிரயாக்ராஜில் 55 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் அங்கு செல்ல முடியாது, அதனால் நாங்கள் திரிவேணி சங்கமத்திலிருந்து நீரை கொண்டு வந்தோம். பல்வேறு சிறைகளில் இருந்து சுமார் 90,000 கைதிகள் புனித நீராடினர்”
இவ்வாறு உத்தரப் பிரதேச சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.