“இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை” - #Madurai ஆதீனம்
இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பெய்து வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் சூழந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முழுவதும் சென்னையில் பல இடங்களில் தொடர் மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதல் மழை படிப்படியாக குறைந்தது. இருப்பினும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்போது லேசான மழையே பெய்து வருகின்றது.
இந்த நிலையில், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பெய்து வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கு மதுரை ஆதினம் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை."
இவ்வாறு மதுரை ஆதினம் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதினம்.