"முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை” - ரயில்வே விளக்கம்!
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக இந்திய ரயில்வே குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதே போல் குறைக்கப்பட்ட இரண்டு முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக 26 ரயில்களில் AC 3 Tier பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிட்டதாகவும் அதன்படி சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று(பிப்.21) குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஏற்கெனவே மகா கும்பமேளாவில் பங்கேற்க டெல்லி ரயில் நிலையத்தில் பக்தர்கள் அதிகளவில் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி காயமடைந்தனர். மேலும் 18 பேர் உயிரிழந்தனர். இத்துயர சம்பவத்தில் இருந்து வெளிவருவதற்குள், முன்வதில்லா 2 பெட்டிகளை இந்திய ரயில்வே குறைப்பதாக வெளியான செய்திகள் அரசியலில் பேசுபொருளானது.
இந்த நிலையில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் ஆதாரம் அற்றது என்றும் ரயில்வே விளக்கம் அளித்திருக்கிறது. மேலும் ரயில்வே, 2-ஆம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.