சென்னையில் வடியாத வெள்ளம் - ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : புயல் பாதிப்புகளை சீர்செய்ய தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி நிவாரணம் - மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் சென்றிருந்தனர்.