#Universities பட்டமளிப்பு விழாக்கள் ஏன் தாமதம்? - ஆளுநர் மாளிகை விளக்கம்!
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகுவது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
அடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் :
"தமிழ்நாட்டில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தனது பணியில் தீவிரமாக உள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை 18 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முன்முயற்சிகளை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக பணிகளை கவனித்து வரும் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா நடத்த உத்தேதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் எவ்வித காலதாமதமும் இன்றி தங்கள் பட்டங்களை பெற முடியும்.
நெட், ஜெஆர்பி தேர்வெழுதும் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவதும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவதும் இம்முயற்சியின் நோக்கம் ஆகும். இதன்மூலம் மாணவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர முடியும்.
இதையும் படியுங்கள் : “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை” – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகளுக்கு காப்புரிமை பெறும் வகையில் குறிப்பாக ஸ்டெம் என அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் காப்புரிமை பெறுதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு துணைவேந்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு மத்திய - மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, கடந்த 2021-2022- ஆண்டு வெறும் 206 ஆக இருந்த ஆராய்ச்சி காப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 2023-2024-ம் ஆண்டு 386 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் ஆராய்ச்சி காப்புரிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெட், ஜெஆர்எப் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதோடு தமிழக பல்கலைக்கழகங்களின் தரவரிசையும் மேம்பட்டுள்ளது. இது உயர்தர ஆராய்ச்சியையும், தரமான கல்வியையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.