#UnionGovt | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... 3% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு DA என கூறப்படும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் பணவீக்கத்தை பொருத்து அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படும்.
அந்த வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் என்பது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதம் வரை தாமதம் செய்யப்பட்டு அதன்பிறகு முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை இன்று (அக்.16) ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு அகவிலைப்படி என்பது 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இப்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 என்று அதிகரித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்துவன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.