இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் காலிஸ்தான் பிரிவினைவாதம் என லண்டனில் பேசியுள்ளார்.
5 நாள் லண்டன் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் ஜெய்சங்கர் லண்டன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது காலிஸ்தான் விவகாரத்தில் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மிகச் சரியான நேரத்தில் இந்தப் பயணம் அமைந்ததாகக் குறிப்பிடும் அமைச்சர், முன்னதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து இந்திய பிரதமர் சார்பாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
இந்தச் சந்திப்புகளில் இந்தியா- பிரிட்டன் இடையேயான தடையில்லா வணிக ஒப்பந்தம், இந்தியா பிரிட்டன் இடையேயான வளர்ச்சிக்கான ‘ரோடுமேப் 2030’ திட்டம் செயல்படுத்துவது ஆகியவை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் உடன் விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது:
எங்களின் நீண்டகால கவனத்துக்குரிய விஷயமாக இருப்பது பிரிவினைவாதம் பற்றியதுதான், சில நேரங்களில் வன்முறை செயல்பாடுகள் அதனை முன்னிட்டு வெவ்வேறு தரப்பால் மேற்கொள்ளப்படுகிறது. அதில் காலிஸ்தான் பிரிவினைவாதமும் அடக்கம். நாங்கள் இங்குள்ள அரசுக்கு புரியவைக்க முயற்சிக்கிறோம். ஒரு ஜனநாயக நாடாக கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். அந்த உரிமை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.