மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
54 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக் காலம் இன்றுடன்(ஏப்ரல் 3) முடிவடைகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படியுங்கள் : “மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” - இபிஎஸ் பேச்சு
91 வயதாகும் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்தார். அவரது பதவிக் காலம் நிறைவால் காலியான இந்த இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தேர்வாகி, முதன்முறையாக மாநிலங்களவைக்கு செல்கிறார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடை பாரமரிப்பு-மீன் வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் அஸ்வினி வைஷ்ணவ் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும், சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, காங்கிரஸ் எம்.பி. நஸீர் ஹுசைன் ஆகியோர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர்.