2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? - ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!
2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் வழங்கிய பாஜக 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதற்கு ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
நேற்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய அமைச்சகங்களை பாஜக தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது. அமித் ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்தையும், எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையையும் தக்க வைத்துக் கொண்டனர்.
இதேபோல கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான ஹெ.டி.குமாரசாமி மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு எஃகு மற்றும் கனரக தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பி சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்பி பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவுக்கு தனி பொறுப்பு இணையமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு ஆயுஷ் துறை , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவியே வேண்டும் எனவும் இணையமைச்சர் பதவி வேண்டாம் என பிரஃபுல் படேல் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து 7 எம்.பி.க்களை வைத்துள்ள தங்களுக்கு 1 இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்பியான ஸ்ரீரங் பார்னே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெறும் 2 எம்.பி.க்களை வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் 7எம்பிக்களை வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரே இணை அமைச்சர் பதவியா என ஸ்ரீரங் பார்னே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.