"அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்" - கனிமொழி எம்.பி பேச்சு!
அம்பேத்கர் சிலையை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை
காப்பாற்றவேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் டாக்டர் அம்பேத்கருக்கு 25 அடி உயர வெண்கல சிலை அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முழுவதுமாக பௌத்த முறைப்படி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள் : நாளை விண்ணில் ஏவப்படும் இன்சாட் – 3DS செயற்கைகோள் – இன்று கவுன்டவுன் தொடக்கம்!
இதில், புத்த துறவிகள் கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி, அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். பின்னர் அம்பேத்கர் நினைவு இல்லத்திற்கான பணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது..
"அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசின் செயபாட்டினால் இருள்நிறைந்த நாட்டில் வாழ்ந்துவருகிறோம். திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை திறக்கும் அன்று நாட்டில் ஒளி பிறக்கும். மேலும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு அச்சுறுத்தல் வந்திருக்கும்
காலத்தில் நாம் நிற்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் ஒற்றுமையை,
இறையாண்மையை காப்பாற்றவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அம்பேத்கர் சிலையை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை
காப்பாற்றவேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என கூறினார்.