தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், நாளை தூத்துக்குடி செல்வார் எனவும் அவர், தூத்துக்குடி டவுன், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் வீடுகள் விளைநிலங்கள் என அனைத்தையும் நேரில் பார்வையிடுவார் எனவும் தெரிகிறது.
ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே நேரில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ 21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தற்போது மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ததன் பின் மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.