சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ் இதழியலின் முன்னோடியாகப் பாமரருக்கும் எளிய மொழிநடையில் உலக நடப்புகளைக் கொண்டு சென்ற சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில், பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் அவருக்கு என் புகழ் வணக்கங்கள்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.