பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இதனிடையே, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ம் தேதி அறிவித்தார். இதனை இந்தியாவும், பாகிஸ்தானும் உறுதி செய்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் தொடர்பான கொள்கை முடிவுகள், பொருளாதார தடைகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.