சாதி வாரி கணக்கெடுப்புக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் - இபிஎஸ் வரவேற்பு!
பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஏப்.30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், அடுத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது. தற்போது, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன்.
கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு எடுத்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன். இதற்காக அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.