விமான நிலையம் - கிளாம்பாக்கம் #Metro | "விரிவாக்க பணிகளுக்கு தமிழ்நாடு அரசு நிதிக்குழு விரைவில் ஒப்புதல் வழங்கும்" - மெட்ரோ நிர்வாகம் தகவல்!
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு தமிழ்நாடு அரசு நிதிக்குழு விரைவில் ஒப்புதல் வழங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2025ம் ஆண்டு முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பின்னர், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் கடந்த 2016ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி சந்தித்தார். அப்போது, சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிக்கான மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 63,246 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ - 2 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வரும் 2027க்குள் மெட்ரோ 2 திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் #Rajinikanth
மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதலைத் தொடர்ந்து விமான நிலையம் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு நிதியமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்புக்கு விரைவில் அனுப்பப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.