மத்திய பட்ஜெட் 2024-25 : துறைரீதியான எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?
மத்திய பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் துறை ரீதியான எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்' என்ற இலக்குடன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு - எதிர்பார்ப்புகள் என்னென்ன?
- மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முக்கியமாக சாலைப் போக்குவரத்து, ரயில்வே, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு இருக்க வாய்ப்புள்ளது
- பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமான அளவு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- கிராமப்புற பொருளாதார மேம்பாடு, எளிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு சார்ந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் இந்த முழு பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
- நடுத்தர மக்களை திருப்திப்படுத்தும் வகையில் வருமான வரி தொடர்பான சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
- டிஜிட்டல் பொருளாதாரச் சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் வங்கி, நிதி அமைப்புகளில் சிறப்புத் திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
- வங்கி, காப்பீடு, சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் துறை, மின்சார வாகனத் துறை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
- பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போது தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.