"40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்" -ராகுல் காந்தி விமர்சனம்!
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தில் இந்திய நீதி பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். ஐந்து நாட்களூக்குப் பிறகு, மத்திய பிரதேத்தில் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஈரோடு தென்னக காசி பைரவர் கோயில் தேய்பிறை அஷ்டமி பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் இந்திய நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியதாவது:
" கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் இரண்டு மடங்காக உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்து மோடி சிறுதொழில்களை அழித்துவிட்டதால், பாகிஸ்தான், பூடான், வங்கதேசத்தை விட இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
பாஜக அரசு கோடீஸ்வரர்களின் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்தது. அந்தப் பணங்கள் எல்லாம் மக்களின் பணங்கள். வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்டவை. கோடீஸ்வர்களின் லட்சக்கணக்கான கடன்களை மோடி அரசால் தள்ளுபடி செய்ய முடியும் என்றால் விவசாயிகளின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?" இவ்வாறு அவர் பேசினார்.