“பாஜக ஆட்சியில் புதிய உச்சம் கண்ட வேலையின்மை”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியின் ஆட்சியில் நம் நாடு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்பின்மையை எதிர்கொள்கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மோடி அரசாங்கத்தின் கீழ் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதனிடையே இளைஞர்களுக்கு மற்றொரு கெட்ட செய்தி வந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 5.1% ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டில் வேலையின்மை உச்சத்தில் இருப்பதைக் காட்டுகிறது. நாட்டில் வேலையில்லாதவர்களில் 83% பேர் இளைஞர்கள். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மையை நம் நாடு எதிர்கொள்கிறது.
வேலைவாப்பின்மை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்று இளைஞர்களுக்கு வேலையோ அல்லது வேலைவாய்ப்புகளோ இல்லை, இளைஞர்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். நரேந்திர மோடி இளைஞர்களுக்கு பெரிய வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால், அவை அனைத்தும் 'தேர்தல் முழக்கங்களாக' மட்டுமே உள்ளன. இளைஞர்களை அலைக்கழித்துவிட்டு நண்பர்களை பணக்காரர்கள் ஆக்க மோடி முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.