“ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார்!” - பரூக் அப்துல்லா அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 63.88% வாக்குகள் பதிவானது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இருப்பினும் தற்போதைய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதில் தேசிய மாநாட்டுக்கட்சி 41 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பாஜக 27 இடங்களில் வெற்றி பெற்றதோடு 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க சுமார் 46 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது தேசிய மாநாட்டுக்கட்சிக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தேசிய மாநாட்டுக்கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகவுள்ளது. தேசிய மாநாட்டுக்கட்சியின் சார்பில் யார் முதல்வராக போகிறார்கள் என்பது பெரும் கேள்வியெழுந்த சூழ்நிலையில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்பார் என அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
உமர் அப்துல்லா தான் போட்டியிட்ட புட்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.