தவெக மாநாட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெகவின் தொண்டர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் மதுரை பராபத்தி மாநாடு திடலில் கூடினர்.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மதுரை பராபத்தியில் நடைபெறும் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு நண்பர்களுடன் வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். மதுரை சக்கிமங்கலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது பிரபாகரன் வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
ஆனால் பிரபாகரன் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் நண்பர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டதால் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தவெக மாநாட்டிற்கு சென்ற (18 வயது) இளைஞர் ரோஷனுக்கு மாநாடு திடலிலே மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் முதலுதவி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநாடு முடிந்து ரோஷன் சொந்த ஊருக்கு சென்ற போது சமயநல்லூர் அருகே மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சமயநல்லூர் அரசு மருத்துவமனைக்கு ரோஷனை அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.