மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது!
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்த விவகாரத்தில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் தனது தந்தையின் சொகுசு காரை கடந்த 19 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் ஓட்டி சென்றுள்ளார். கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. மதுபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வெறும் 14 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதற்கும், நீதிமன்றம் விதித்துள்ள மிக எளிய நிபந்தனைகளும் இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து, சிறுவனின் தந்தையும், கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால் மீது சிறுவனுக்கு காரை கொடுத்தது, மது அருந்த அனுமதி அளித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தலைமறைவான சிறுவனின் தந்தையை தேடி வந்த காவல்துறையினர், கடந்த 21 ஆம் தேதி ஒளரங்காபாத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு புனே குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மகனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரிந்தும் தந்தை காரை அளித்ததாகவும், சிறுவன் மது அருந்தியது தந்தைக்கு தெரியும் என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சிறுவனுக்கு மதுபானம் வழங்கிய பார் உரிமையார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சாட்சியங்களை கலைக்க முயன்றதாக, காவல் அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்த விவகாரத்தில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.