உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இரண்டு நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நீதிபதி அலோக் ஆராதே
நீதிபதி அலோக் ஆராதே ஏப்ரல் 13, 1964இல் பிறந்தார். தற்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், கர்நாடக உயர்நீதிமன்றம் , ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி
நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி மே 28, 1968 இல் பிறந்தார். 1991 செப்டம்பரில் வழக்கறிஞர் பணியில் சேர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். ஜூலை 2023 இல் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். மேலும் 2025 ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். நீதிபதி பஞ்சோலி குற்றவியல் சட்டம், சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளில் பணியாற்றியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் 32 நீதிபதிகள் இருந்த நிலையில்,தற்போது நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் இரண்டு காலியிடங்களை நிரப்பியுள்ளதால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.