சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில்
சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர்
உயிரிழந்த நிலையில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர். இதனால் பொது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டு பிடிக்க வேண்டும் என கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவாலா, நாடுகாணி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், கூடலூர் பகுதியில் இயங்கும் லாரி, ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் என அனைத்து தரப்பினரும் வாகனங்களை இயக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஏழு காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆறு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 860 காவல்துறையினர் கூடலூர் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலைமதிப்பில்லா உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.