வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி - தமிழ்நாட்டில் இன்று முதல் தொடக்கம்!
இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.