சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!
சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து
காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி என்ற ரங்கசாமி. இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில்
நாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளார். இவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு இரு
சக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் கோழியை திருட முயற்சித்தனர். அப்போது நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ராமசாமி வந்து பார்த்தபோது, மூன்று பேரையும் பிடிக்க முயன்றார். அப்போது மூன்று பேரும் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இந்த நிலையில், இன்று (நவ.30) காலை மூன்று பேரும் சதுமுகை அருகே உள்ள மயானத்தில் கட்டப்பையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த சதுமுகை சேர்ந்த சிவராஜ் என்பவர் அந்த மூன்று பேரையும் பார்த்து ஏன் இங்கு நிற்கிறீர்கள்? பையில் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுதாரித்துக் கொண்ட சிவராஜ் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து கட்டப்பையை சோதனை செய்தபோது, அதில் சந்தன மரக்கட்டை இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கிராமத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி அப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். பதுக்கி வைத்த சந்தன கட்டைகளையும், விட்டு சென்ற இருசக்கர வாகனத்தையும் எடுக்க வந்தது தெரியவந்தது. மேலும் இந்த மூன்று பேரும் ரஜினி என்ற ரங்கசாமி விவசாய தோட்டத்தில் இருந்த நாட்டுக்கோழி பண்ணைக்குள் புகுந்து கோழி திருட முயன்றதும் தெரிய வந்ததை அடுத்து கிராம மக்கள் இருவரையும் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சத்தியமங்கலம்
போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் கெம்மநாயக்கன்பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் விஜய்( 21), ஐயப்பன் மகன் சரவணன் (23) என தெரியவந்தது. மேலும் தப்பிய ஓடிய நரசாபுரத்தை சேர்ந்த சசிகுமார் (25) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற குற்றத்திற்காக, வனத்துறையிடம் விஜய் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் ஒப்படைத்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சந்தன கட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய நரசாபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.