“தமிழ்நாடு அரசியலில் 2 நடிகர்கள்... இருவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகின்ற தனி கம்பெனி” - விஜய், சீமானை விமர்சித்த வன்னி அரசு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜர் சிலை அருகே விடுதலை
சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா, நலத்திட்டங்கள் வழங்கு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
“எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில்
இருக்கக்கூடிய கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.
2026இல் கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்கப் போகிறது என்பதற்கு முன்னோட்டமாக தான் இன்றைய காலகட்டத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் அமைந்துள்ளன.
தமிழகத்தினை மட்டுமல்ல இந்தியாவை பாதுகாக்க கூடிய கடமை, பொறுப்பு விடுதலை சிறுத்தைகளுக்கு இருக்கு என்பதை உணர்ந்துதான் களத்தில் களமாடிக்
கொண்டிருக்கிறோம். தொகுதி பேரங்களுக்காக இன்றைக்கு பலர் கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வி.சி. க தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
வட இந்தியாவில் மாட்டுக்கறி வைத்திருந்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு, அவரது இலக்கினை, அவர் ஏற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை தகர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு பிரிவாக நீக்கி வருகிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு. பல்வேறு சக்திகள் 2026-ல் எப்படியாவது ஆட்சி பிடிக்க வேண்டும் என்று, அதற்கான வேலைகளை செய்கின்றனர். இதுதவிர இரண்டு நடிகர்கள் இருக்கின்றனர்.
ஒருவர் த.வெக.க தலைவர் நடிகர் விஜய், இன்னொருவர் நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த இரண்டு பேருமே பாஜகவினால் இயக்கப்படுகிறவர்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுபவர் சீமான். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும், புரட்சியை உருவாக்க முடியும் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய், சீமான் இருவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகின்ற தனி கம்பெனி. சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக நடிகர் விஜய், திமுகவின் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி வாக்குகளை பிரிப்பதற்காக சீமான். மோடியின் ஆசி பெற்று சீமான் இருக்கிறார். தமிழகத்தில் மக்களோடு மக்களாக இருக்கின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைவர் திருமாவளவன்.
பல்வேறு போராட்டங்கள் கடந்து தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வந்துள்ளது.
மற்ற இயக்கங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது. நடிகர் விஜயை ஜெயிலில் பிடித்துப் போட்டால் வரமாட்டார். சீமானை கைது செய்வார்கள் என்பதால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னால் பம்மிக் கொண்டிருக்கிறார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற சம்பவத்திற்கு சீமானோ, நடிகர் விஜய்யோ போராடவில்லை. எந்த கட்சியும் போராடவில்லை. மக்களுக்காக என்றும் உள்ள ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தான்” என்றார்.