விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை - ஒரே வரியில் பதிலளித்த தவெக பொருளாளர்!
மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 85வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படகிறது. இதனை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜிவ் பவனில் மறைந்த ராமமூர்த்தியின் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்துத்துவா மற்றும் மதவாத சக்தியை அகற்ற வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்" என பேசியிருந்தார்.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (ஜன.20) சந்திக்க உள்ளார். இதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி அக்கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் மக்களை சந்திப்பது குறித்து காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டு வரும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செல்வப்பெருந்தகையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட்ராமன், “அதற்கெல்லாம் நிறைய தூரங்கள் இருக்கிறது, அப்போது அதைப்பற்றி பேசலாம்” என ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.