For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடும் வறட்சியில் துனிசியா நாடு... 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!

02:27 PM Mar 03, 2024 IST | Web Editor
கடும் வறட்சியில் துனிசியா நாடு    16  குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு
Advertisement

வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால் ஆண்டின் பெரும்பகுதியை மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், ஆறுகள் போன்ற நீர்நிலைகள் இல்லாததால், நிலத்தடி நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலமாக மட்டுமே குடிநீர் கிடைத்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த குடிநீர் விநியோக திட்டமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு குடிநீருக்காக கோட்டா முறை ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. கடந்தாண்டு மழைப்பொழிவு போதுமான அளவில் இல்லை என அரசு அறிவித்தது. தற்போது அங்கு கோடைக்காலம் துவங்கியுள்ளதோடு, கடும் வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், குடிநீருக்கான கட்டணத்தை உயர்த்தி துனிசியா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 40 கன அடி வரை பயன்படுத்தும் குடியிருப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை எனவும், அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்திய மதிப்பில் ஒரு கன அடிக்கு ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது முந்தைய கட்டணத்தை விட 16% அதிகம்.

மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்களில் குடிநீருக்கான பயன்பாட்டிற்கான கட்டணங்கள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. ஒரு கன அடி தண்ணீரை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ரூ.40 வரை செலுத்த வேண்டும். இது முந்தைய கட்டணத்தைவிட 13% அதிகம் ஆகும். வரும் காலங்களில் நீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

Tags :
Advertisement