“டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” - அமைச்சர் மூர்த்தி தகவல்!
மதுரையில் 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி சார்பாக அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 471.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட 31 வார்டுகள் பயன்பெற உள்ளன. மேலும் இத்திட்டத்தின் வழியாக 79 ஆயிரத்து 227 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியபோது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து மேலூர் மக்களுக்காக துணை நின்றார். அண்ணாமலை மேலூர் மக்களை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் முழுமையாக மாநில அரசு செயல்படுத்த
கூடிய திட்டம் என கூறியுள்ளார்.
ஆனால் முதலமைச்சர் மேலூர் பகுதியில் இருந்து ஒரு புடி மண்ணை கூட அள்ள முடியாது என தெளிவாக கூறி விட்டார். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய 5,000 மக்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவுப்படி மக்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது, "மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் வழங்ககூடிய அம்ரூத் குடிநீர் திட்டத்தை முதல்வர் மார்ச் மாதம் தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சிக்கு 3 ஆண்டுகளில் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு 3 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் மேற்கொண்டு உள்ளார். மதுரை மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.
மதுரை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். திருச்சிக்கு மற்ற மாவட்டங்களை விட அதிகமான நிதியை மதுரைக்கு ஒதுக்கி உள்ளார். மேலூர் மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாகவும், உறுதியாகவும் டங்ஸ்டன் திட்டம் குறித்து பேசியதும் நடவடிக்கை எடுத்து உள்ளார்" என தெரிவித்தார்.